Share via:
திருச்செந்தூர் ரெயிலில் கடந்த 2நாட்களாக சிக்கிக் கொண்ட 957 பயணிகளின் திக் திக் நிமிடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) இரவு 8.25 மணியளவில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 957 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
ஒரே இரவில் முடிய வேண்டிய இவர்களின் பயணம் கனமழை காரணமாக 2 நாட்கள் நீடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் புறப்படும் போது கனமழை ஆரம்பித்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்து இருக்கும் தாதன்குளம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு திடீரென்று தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த சரளைக் கற்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. அந்தரத்தில் தொங்கிய தண்டவாளத்தால் பயணிகள் பதற்றத்தில் பதற ஆரம்பித்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், ரெயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நிலையில், பயணிகள் ரெயிலை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
சில மணிநேரத்தில் நிலைமை சீராகிவிடும் என்று எதிர்பார்த்திருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் தண்ணீர், மருந்துகள் காலியானதால் ரெயிலில் இருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டது. மீட்பு படையினரால் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று ரெயில் நிர்வாகமும் கைவிரித்ததால் மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் அடுத்த நாளான திங்கட்கிழமை முதல் உணவு கிடைக்காமல் அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்று பயணிகள் தங்களுக்கு தேவையான பிஸ்கெட், பன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் அருகில் இருந்த கிராம மக்கள் ரெயில் நிலையத்தின் அருகில் இருந்த பத்ரகாளியம்மன் கோவிலில் சமைத்த உணவுகளை பயணிகளுக்கு கொடுத்து மனிதநேயத்தை நிலை நாட்டியதாக பக்தர்கள் கூறி நெகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் கிராம மக்கள் தங்கள் மாடுகளில் இருந்து கறந்து எடுத்து வந்த பாலை காய்ச்சி ரெயிலில் இருந்த ஒவ்வொரு பெட்டியாக சென்று அவற்றை கொடுத்தது மனிதநேயத்தின் உச்சம் என்று பயணிகள் கண்கலங்கியபடி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது.