Share via:
2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிசில் கடந்த 26ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (29ம்தேதி) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 3வது இடத்தை பிடித்தார். அதன்படி 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை (வெண்கலம்) மனு பாக்கர் வென்று கொடுத்து வீரப்பெண்மணியாக கருதப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து வீராங்கனை மனுபாக்கருக்கு பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், வீராங்கனை மனு பாக்கருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மனு பாக்கர், இந்த ஒரு பதக்கம் மட்டுமல்லாமல், இந்தியா பல பதக்கங்களை வெல்லும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.