Share via:
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் திடீரென்று பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக். இவரது மனைவி அக்ஷயதா இந்தியாவில் பிறந்தவர். இவர் வேறு யாருமில்லை இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள்.
பிரதமர் ரிஷி சுனக் உள்பட இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் உள்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் சுயெல்லா பிரேவர்மேன். இவருக்கு வயது 43. இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீன- இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக இவர் கருத்து தெரிவித்ததன் விளைவாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பாலஸ்தீனம்- இஸ்ரேல் என உலகமே இரண்டுபட்டு நிற்கிறது. இருதரப்பிலும் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டுக்கு ஏற்க பலரும் தங்கள் நாடுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதற்கு போலீசார் அனுமதி அளித்தது தொடர்பாக சுயெல்லா தெரிவித்த கருத்துதான் சர்ச்சையை கிளப்பியது.
சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்த கருத்து ஆட்சிக்கு எதிராக மாறியதாலும், அவரின் பேச்சுக்கு அதிகளவு கண்டனங்கள் எழுந்ததாலும்தான் பிரதமர் ரிஷிசுனக் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று இங்கிலாந்து நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.