Share via:
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மாசு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை இரவு முதலே பொது மக்கள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு அடுத்தநாளான நேற்று தீபாவளியை தெறிக்கவிடுவோம் என்ற ரீதியில் அதிகளவில் பட்டாசுகளை அதிகாலை முதலே வெடிக்க தொடங்கினார்கள்.
அதன்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பட்டாசுகளை வெடித்த நிலையில் சென்னை, நாகை, கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பட்டாசு சத்தம் விண்ணை பிளந்தது. தொடர்ந்து பல மணி நேரங்கள் பட்டாசுகளை பொது மக்கள் வெடித்து தள்ளினர்.
ஆனால் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதை பொது மக்கள் கருத்தில் கொண்டது போல் தெரியவில்லை. பல மணி நேரம் பட்டாசுகளை வெடித்து தள்ளினர். இது குறித்து காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னையில் மாற்று மாசு அதிகரித்துள்ளது. ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 என காற்று மாசு பதிவாகியுள்ள நிலையில் சென்னையின் அனைத்து இடங்களிலும் 170 குறியீட்டுக்கும் அதிகமாக காற்று மாசு பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினத்தை பொறுத்த வரையில் சென்னையில் காற்றின் தரக்குறியீடு 83 ஆகவும், நேற்று 115 ஆகவும் இருந்த நிலையில் 178 ஆக அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.