Share via:

தி.மு.க. கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் புறவழிச் சாலையில்
நடேசன் நகரில் ஒரு இல்லத்தில் தங்கி தேர்தல் பிரசார பணிகளைக் கவனித்துவருகிறார்.
பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.
வெள்ளத்தின் போது தமிழகத்தை எட்டிப் பார்க்காத மோடி, இப்போது எதற்கு வருகிறார் என்று
ரோடு ஷோவுக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த
வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளரை
கடலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’வருமான வரித்துறையா பாஜகவின் கூலிப்படையா?
தேர்தல் பணிக்காக வந்து தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறை சோதனை செய்வது இந்திய
அளவில் இது தான் முதன்முறை. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில்
தேர்தல் பணிக்காக கட்சித்தோழர் வீட்டில் தங்கியுள்ளார். தலைவர் வீடு அல்ல.
வருமானவரித்துறை சோதனை போட வேண்டுமானால், சென்னை வீட்டில் போடவேண்டும்.
தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட டீம் தான் சோதனை போட முடியும்.
ஆனால்,வருமானவரித்துறை சோதனை போடுவதன் மூலம் அப்பட்டமான விதிமுறை மீறலுடன் அச்சுறுத்தலை
தந்துள்ளது. விடுதலைச்சிறுத்தைகளை கருத்தியல் களத்திலும் தேர்தல் களத்திலும் எதிர்கொள்ள
முடியாத பாஜக வருமான வரித்துறையை வைத்து அச்சுறுத்துவது கோழைத்தனமே! இந்த அச்சுறுத்தலுக்கு
ஒரு போதும் சிறுத்தைகள் அஞ்சமாட்டோம்! சனநாயகத்தை அழித்தொழிக்கும் பாஜகவை இந்த தேர்தலில்
மக்கள் அழித்தொழிப்பது உறுதி’’ என்று குரல் கொடுத்துவருகிறார்கள்.