Share via:
சென்னையில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று அதிகாலை (அக்.18) சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி இந்த சோதனை ஆயிரம்விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
வரி ஏய்ப்பு தொடர்பாக பெறப்பட்ட ரகசிய புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இன்று 2வது நாளாக வருமானவரித் துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல் சென்னையில் மருந்து நிறுவனங்களிலும் அதன் தொடர்புடைய மற்றும் அதற்கு சொந்தமான பல இடங்களிலும் இன்று 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 2நாட்களாகவே சென்னை பரபரப்பாக காணப்படுகிறது.
அதன்படி வேப்பேரி கே.வி.எண்டர்பிரைசஸ் பார்க் டவுன் ககவரலால் அண்ட் கோ உள்ளிட்ட மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கம் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான அறிக்கையை வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.