Share via:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தக் கட்டண உயர்வு வருகிற 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு மற்றும் பழைய கட்டிங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானங்களும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று (அக்.31) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வருகிற 10ம் தேதி நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 40 ச.மீட்டருக்கு குறைவான இடத்தில் வீடு கட்டும் ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் 10 சதுர மீட்டருக்கு வசூலிக்கப்பட்டு வரும் 90 ரூபாய் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேபோல் 41 முதல் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுபவர்களிடம் 10 சதுர மீட்டருக்கு வசூலிக்கப்பட்டு வரும் ரூ.155 கட்டணத்திலும் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
இந்த கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு என்பது 100 சதுர மீட்டருக்கு மேல் அதாவது 1,076 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்களுக்கு 100 சதவீதம் அதிகரிகப்பட்டுள்ளது. அதன்படி 101 சதுர மீட்டர் முதல் 401 சதுர மீட்டர் அளவுக்கு வீடுகள் கட்டும்போது அவர்கள் 10 சதுர மீட்டருக்கு செலுத்தி வந்த கட்டணமான ரூ.1,050, தற்போது ரூ.2,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவீடு என்பது வணிக கட்டிடங்களாக இருக்கும்பட்சத்தில் இதன் கட்டணம் ரூ.2,300 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.