Share via:
தமிழகத்தில் கார் ஓட்டுநர்கள் போராட்டத்தின் எதிரொலியாக ஓலா, உபர் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஓலா, ஊபர் மூலம் கார், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பயணத்துக்காகவும் ஓலா, ஊபர் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு வாசலுக்கே வந்து பயணிகளை அழைத்துச் செல்லும் இத்தகைய ஆட்டோ, கார்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
ஓலா, ஊபர் ஓட்டுநர்கள், வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இப்போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவை கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.120 வரை சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தங்களது அதிருப்தியையும் பதிவிட்டு வருகின்றனர்.