Share via:
ராஜஸ்தானில் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் பா.ஜ.க. தலைவர்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் குழம்பிப்போயுள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன.
இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 100 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அங்கு முதல்வராக இருந்து வருகிறார். அதேபோன்று நாத்வாரா தொகுதி எம்.எல்.ஏ.வான சி.பி.ஜோஷி மாநில சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பா.ஜ.க. அண்மையில் ஒரு போஸ்டர் அடித்து ஆட்டோக்களின் பின்புறத்தில் ஒட்டியுள்ளது. அதில் பிரதமர் நரேந்திமோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்றகு இடையில் காங்கிரஸ் மாநில தலைவரும் சபாநாயகருமான சி.பி.ஜோஷியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இங்கு உண்மையில் இருக்க வேண்டிய புகைப்படம் பா.ஜ.க. மூத்த நிர்வாகியான சந்திரபிரகாஷ் ஜோஷி படம்தான்.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து பலர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். போஸ்டரில் புகைப்படம் மாறி இடம்பெற்றது குறித்து கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.
சொந்தக் கட்சிக்காரர் எப்படி இருப்பார் என்று கூட தெரியாமல் பா.ஜ.க.வினர் போஸ்டர் அடிக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் கமெண்டுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
