Share via:
ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு சிக்கல் உண்டாக்கிய
பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கும் ஐ’ம் ஸாரி ஐயப்பா பாடலையொட்டி சமுகவலைதளத்தில் நடக்கும்
மோதல் பெரும் வைரலாகியுள்ளது.
பா.ஜ.க. ஆதரவாளர்கள், ‘’இந்த பாடலுக்கு பா ரஞ்சித் , இசைவாணி இருவரையும்
திமுக அரசு கைது செய்யாதது ஏன்? ஐய்யப பக்தர்களை திட்டமிட்டு ஒவ்வொரு வருடமும் இதே
மாதங்களில் அவமதிப்பதோடு – மத மோதலைத் தூண்டும் இவர்கள் இருவரும் கைது செய்யாது ஏன்?
திமுக ஆசியோடு தான் இது நடக்கிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் தமிழகம்
முழுக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.
அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் செய்தி பரப்புகிறார்கள்.
அதேநேரம் ஐ சப்போர்ட் இசைவாணி என்று அவரது ஆதரவாளர்கள் ஐயப்பா
பாடலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள், ‘’பாடகர் இசைவாணியை இந்துத்துவவாதிகள்
கடந்த நான்கு நாட்களாக சமூகவலைதளத்தில் மிரட்டியும், கொச்சைப்படுத்தியும், தொடர்ந்து
அலைபேசியில் மிரட்டலும் விடுத்து வருகிறார்கள். இசைவாணி இது குறித்த ஆதாரங்களுடன் நேற்று
காலை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு
தற்போது விசாரணையில் இருக்கிறது.
ஆறு வருடத்திற்கு முன் இயற்றப்பட்டு, பல்வேறு மேடைகளில் பாடிய
அப்பாடல், நம்பிக்கை என்கிற பெயரில் நிலவும் அசமத்துவத்தை கேள்விகுட்படுத்துகிற பாடல்.
இசைவாணிக்கு மட்டுமல்ல, அதை கேள்விகுட்படுத்த, விமர்சிக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது.
படைப்புரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிராக மிரட்டல் விடுக்கும் இத்தகையவர்களை கண்டிக்கும்
விதமாய், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணியின் பாதுகாப்பு, மற்றும் படைப்புச்
சுதந்திரத்தை உறுதி செய்ய, உரிய நேரத்தில் சென்னை மாநகர காவல் துறை முன்வந்து இவர்களை
கைது செய்ய வேண்டும்.
கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும்,சமூக ரீதியாகவும்
மறுக்கப்பட்டவைகளைக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு
இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டைக் கண்டித்துத் தான் இந்தப்
பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும்
சக்திகள் ஒவ்வொருவரும், பாடகர் இசைவாணி அவர்களுடன் துணை நிற்க வேண்டும்’’ என்று குரல்
கொடுக்கிறார்கள்.
எப்படியோ தமிழக அரசியலை திசை திருப்ப இன்னொரு பஞ்சாயத்து ஆரம்பமாகியுள்ளது