தான் இசை அமைத்த பாடல்களை மேடைக் கச்சேரியில் பாடினாலும் காப்பிரைட் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கறார் காட்டியதும், அதனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதும் உண்டு. ஆனாலும், இளையராஜா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்துவருகிறார். இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் உடனே அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம்.

சமீபத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்”, தமிழில் வெளியான “96”, “மெய்யழகன்” உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக நீதிமன்றமும் சென்றார் இளையராஜா. இந்நிலையில் இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதற்கான காப்புரிமை அவருக்கே கிடையாது என அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

இளையராஜா இசையமைத்த “மூடுபனி” திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘என் இனிய பொன் நிலாவே’. பாடல் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பாடலை நடிகர் ஜீவா நடித்துள்ள “அகத்தியா” திரைப்படத்தில் ரீக்ரியேட் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. பழைய பாடலை யேசுதாஸ் பாடியிருந்த நிலையில் இந்த பாடலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் பாடியிருந்தார். இந்நிலையில், ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் காப்புரிமை தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அனுமதியின்றி இந்த பாடலை “அகத்தியா” படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் ‘சரிகம நிறுவனம்’ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதாவது “மூடுபனி” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களின் சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக்கல் வொர்க்ஸ் ஆகியவற்றின் காப்புரிமை தங்களிடம் தான் உள்ளது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் மனுவில் சரிகம நிறுவனம் கூறியிருந்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த பாடலை உபயோகப்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக “அகத்தியா” திரைப்படத்தின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், “அந்த பாடலுக்கான காப்புரிமையை நாங்கள் தான் முறைப்படி உரிமை பெற்று வைத்திருக்கிறோம். தயாரிப்பாளரிடம் போடப்பட்ட ஒப்பந்தமும் எங்களிடம் உள்ளது. இதனால் இசையமைப்பாளர் என்ற முறையில் இளையராஜா அந்த பாடலை பிறருக்கு வழங்க முடியாது” என்று கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது சரிகம நிறுவனம்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆதாரங்களை முழுமையாக ஆராய்ந்த பின், “என் இனிய பொன் நிலாவே” பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடமே உள்ளது என்றும், அந்த பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனால் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா 3ம் நபருக்கு அந்த பாடலை வழங்க அனுமதி அளிக்க முடியாது’’ என்றும் தீர்ப்பு வழங்கினார்.

எனவே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட அந்த பாடலை ‘அகத்தியா’ திரைப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக நீதிபதி மினி புஷ்கர்னா அதிரடியாக உத்தரவிட்டார். அதே நேரம் 30 லட்சம் ரூபாய் உரிமத் தொகை செலுத்தி இந்த பாடலை திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் வேல்ஸ் நிறுவனம் இந்த தொகையை கட்ட மறுத்து இந்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. காப்புரிமை குறித்து நீதிமன்றத் தீர்ப்பு இளையராஜாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link