Share via:
பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என ஏதாவது வந்துவிட்டால் உடனே டாக்டர்
ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை ஞாபகத்துக்கு
வந்துவிடும். அந்த வகையில் இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அன்புமணி
வன்னியர் ஓட்டுகளை வளைப்பதுடன் அ.தி.மு.க. வாக்குகளுக்கும் அடி போடுகிறார்.
இத்தனை நாட்களும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களை
கண்டுகொள்ளாத அன்புமணி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதிக்குள் அடங்கியிருக்கும்
பாப்பனப்பட்டி நினைவுத் தூணில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
சாணிமேடு கிராமத்தில் பிரசாரம் செய்த அன்புமணி, “நம் உரிமைகளுக்காக
நடைபெறும் இத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது. இட ஒதுக்கீட்டுக்காக மருத்துவர்
ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார். எங்கிருந்தோ வந்த அமைச்சர் பணம் கொடுத்து
இக்கூட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள்.
ஆனால், நாம் பணத்துக்கு மயங்குபவர்களா? இத்தேர்தலில் பாமக வெற்றி
பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். முதல்வருக்கு நம்மை கண்டு
பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே,
என்று பிரித்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்குகூட திமுகவுக்கு விழக்கூடாது…’’ என்றவர்
அப்படியே அதிமுகவினருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
‘’அ.தி.மு.க.வினருக்கு நன்றாகத் தெரியும். நம் பொது எதிரி திமுக.
அதனால் நீங்கள் தேர்தல் புறக்கணிப்பு என்று வீட்டில் இருந்துவிடாமல் பா.ம.க.வுக்கு
வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் டாக்டர் ராமதாஸ், ‘’2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவை பாட்டாளி
மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை.
அதற்காக மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில்
திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில்
திமுக அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு ? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை
சுவைப்பதற்கு மட்டும் தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா?’’ என்று கோபமாக கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
தேர்தல் முடிஞ்சதும் யாராச்சும் இது பத்தி பேசுறாங்களான்னு பார்க்கலாம்.