Share via:
ஆகஸ்ட் மாதம் அண்ணாமலையை அரசியல் படிக்க அனுப்பிவிட்டு, தமிழக
பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள்
வருகின்றன. இந்த நிலையில், அண்ணாமலையை மாற்றினால் தமிழகத்தில் பா.ஜ.க. அழிந்தே போகும்
என்று அவரது ஐ.டி. விங் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் நிறைய பதிவுகள்
வெளியிடத் தொடங்கியுள்ளன.
அந்த பதிவுகளில், ‘அண்ணாமலை இல்லையென்றால் ஒருசில தொகுதிகளில்
வெற்றிபெற வேண்டும் என்பதற்காக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் நிலை
உருவாகிவிடும். அதன் பிறகு பா.ஜ.க.வுக்கு அழிவு ஏற்பட்டு விடும்.
ஏனென்றால், தமிழகத்தில் அண்ணாமலை பா.ஜ.க.வின் வாக்கு விகிதத்தை
207.1% அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறார். இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு 19 தொகுதிகளில்
பா.ஜ.க. போட்டியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக பா.ஜ.க.வுக்கு 12% வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் டபுள் டிஜிட்டில் வாக்குகள் வாங்க வைத்து மாபெரும்
சாதனை படைத்திருக்கும் அண்ணாமலையை மாற்றினால், அடுத்த தலைவர் யார் என்பதற்கு பெரிய
அடிதடியே நடக்கும். இதனால் இப்போது மக்களுக்கு பா.ஜ.க. மீதுள்ள மரியாதையும் மதிப்பும்
ஒட்டுமொத்தமாக குலைந்துவிடும்.
அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்குவது தமிழகத்தில் பா.ஜக.வின்
தற்கொலைக்குச் சமம். அதனால் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அண்ணாமலையை
படிக்க அனுமதிக்க வேண்டாம். அப்படியே அனுமதி கொடுத்தாலும் அவர் அங்கிருந்தே கட்சிப்
பணிகளைக் கவனிக்கட்டும்’’ என்று கதறியிருக்கிறார்.
இந்த பதிவுகள் அனைத்தும் அண்ணாமலையின் ஐ.டி. விங் அவரது கட்சிப்
பதவியை தக்கவைக்கும் கடைசி முயற்சியாக களம் இறங்குவதைக் காட்டுகின்றன என்று பா.ஜ.க.வின்
மூத்த தலைவர்கள் சிரிக்கிறார்கள். அண்ணாமலை இல்லைன்னா கட்சியே இல்லை என்று மோடிக்கே
எச்சரிக்கை விடுவதை டெல்லி மேலிடம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்று பார்க்கலாம்.