Share via:
தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து காவிரி விவகாரத்தில் உடனடி தீர்வு காண மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அழைப்பைவிடுத்துள்ளார்.
காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மையிடமும், நீதிமன்றத்திடமும் முறையிட்டு வருகிறது.
தண்ணீர் தர வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள கர்நாடக அரசை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் நாளை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது மட்டும் போதாது. முறைப்படி நீதிமன்றத்தையும் அணுகி தமிழகத்திற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் பெற வேண்டும்.
டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாலைவனமாக மாறி வருகிறது. இதனால் விவசாயத்தை நம்பி அங்கு வாழும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி வருகிறது.
எனவே கர்நாடக அரசு தர மறுக்கும் தண்ணீரை தமிழக அரசு உடனடியாக பெற்று விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். தமிழக அரசின் முக்கிய கடமையாக இது உள்ளது.
ஒருவேளை நீதிமன்றத்தை மீறியும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்துக் கட்சியையும் கூட்டி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவின் அறிக்கை தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.