Share via:
சென்னையின் இயற்கை வடிகால்களான கூவம், கொசஸ்தலை, அடையாறு ஆகிய மூன்று நதிகளையும் பக்கிங்காம் கால்வாயையும் விழுங்கி வீடுகள், பேருந்துநிலையம் என கட்டியிருக்கிறார்கள் மக்கள். இதனால் ஒவ்வொரு மழை நேரத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பது தடுக்க முடியாமல் போகிறது. இதையொட்டி பாலங்களில் எல்லாம் கார்களை பாதுகாப்பு கருதி மக்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பிக்கும் சூழல் நிலவுகிறது.
இது குறித்துப் பேசும் பொதுநலச் சங்கத்தினர், ‘’சின்ன மழை பெய்தாலே தங்கள் காரைக் கொண்டுவந்து பாலத்தில் நிறுத்திவிடுகிறார்கள். மிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழை நீர் தேங்காது என்ற நம்பிக்கை மக்களுக்கு இருப்பதில்லை. அதனால் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை என்று கார்களை பாலத்தில் நிறுத்திவைக்கிறார்கள்.
மேம்பாலத்தில் கார் நிறுத்தி வைத்து பாதுகாக்க நினைக்கும் மக்கள் பல லட்சங்களில் வீடு வாங்கும்போது அங்கு தண்ணீர் நிக்குமா என்பதைக் கேட்க மறந்துவிடுகிறார்கள். காருக்கு பார்க்கிங் இருக்கிறதா என்பதையும் பார்ப்பதில்லை. இது போன்ற நேரங்களில் பத்திரமாக காரை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், மழை இல்லாத நேரத்தில் இங்கு யாரும் வந்து நிறுத்த மாட்டார்கள். எனவே, அது நிச்சயம் தேவையில்லாத செலவாகவே இருக்கும்.
கடைசி நேரத்தில் அரசு அவசரம் அவசரமாக சில இடங்களில் ரோடு போடுகிறது. இதனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒரு மழைக்குள் இந்த ரோடுகள் எல்லாம் காணாமல் போய்விடும். மழை இல்லாத நேரத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்’’ என்கிறார்கள்.
அதேநேரம், மழை வந்தால் நாலைந்து நாட்கள் தொந்தரவாகவே இருக்கும். அதனை அனுபவிக்கத்தான் வேண்டும். மழை நேரத்தில் சென்னை தவிர இந்தியாவுல எந்த ஊரு மாடல் நல்லாருக்கு? டெல்லி போலாமா? மும்பை? பெங்களூரு? ஹைதராபாத்? அஹமதாபாத்? எல்லா ஊர்களின் நிலையும் இது தான்.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி இரவு பகலாக வேலை செய்கிறது. ஆளுங்கட்சி என்ன செய்கிறது? தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கிறது…’’ என்று தி.மு.க.வினர் குரல் கொடுக்கிறார்கள்.
அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதனால் பெரும்பாலான லாட்ஜ்களை மக்கள் புக்கிங் செய்து வைத்திருக்கிறார்கள். கடைகளில் அரிசி, மளிகை, பால் போன்றவற்றை பல நாட்களுக்கு வாங்கி பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த செயற்கைத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அச்சத்திற்கு ஆளாகிறார்கள். ஏதோ பெரிதாக நடக்கப்போகிறத் என்ற அச்சத்தில் நிறைய பேர் வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊருக்குப் போகிறார்கள். இவை எல்லாம் தீர்வுகள் அல்ல.
அந்தந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து மழை நீர் செல்வதற்கு வழிவகை கண்டுபிடித்து அரசு மூலம் தீர்வு ஏற்படுத்த வேண்டும். அது ஒன்றே சரியான வழி.