Share via:
சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துவரும் நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் புழல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர் ஹைரோடு ஜமாலயா, விருகம்பாக்கம், அசோக்நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல் கே.கே.நகர் பர்னபி சாலை, காமராஜ் சாலை, அயனாவரம், மேற்குமாம்பலம் ரெயில் நிலையம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெருப்பு மேடு, செட்டி தெரு, கோதாமேடு, பஜார் தெரு, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், கங்கையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு நேரில் நடந்து சென்று களப்பணிகளை பார்வையிட்டார். மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாநகராட்சி அலுவலர்களை வலியுறுத்தினார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்து சென்று கள ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
அதேபோல் சென்னை பேசின்பிரிட்ஜ் யானைகவுனி பகுதியில் அமைச்சர் சேகர்பாபு களத்தில் நேராக சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் பெருநகர சென்னை மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.