Share via:
நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் (2016&2021) எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் பணியுடன் சேர்த்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். அப்போது 4,800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்ர்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இதனை கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி 2018ம் ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் மாற்றப்பட்டது என்று அறிவித்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை பிறப்பித்தது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னென்ன வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன என்பது குறித்து அரசியல் விமர்சகர்களும், சட்ட வல்லுனர்களும் விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.