Share via:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடப் போவது இல்லை
என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று பொதுச்செயலாளர் ஆனந்த் கடிதம்
மூலம் அதனை உறுதி செய்திருக்கிறார். சீமான் கட்சியினர் விஜய் ஆட்களை வளைக்க முயற்சி
செய்வதைத் தடுக்கவே கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக இன்று ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக
வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க
அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின்
பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்
உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல்
தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப்
பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம்
என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி
இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்
தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும்
இல்லை என்பதையும் கட்சித் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அவரது கட்சியினரை உசுப்பேற்றியிருக்கிறது. ‘’இடைத்தேர்தலில்
களம் கண்டு நமது பலம் என்ன, பலவீனம் என்னவென்பதை அறியக்கூடிய நல்ல வாய்ப்பை விஜய் கோட்டை
விட்டுள்ளார். தோல்வி அடைந்தால் கூட அதை ஆளுங்கட்சியின் முறைகேடு என்று அம்பலப்படுத்தியிருக்கலாம்.
அதேநேரம், சீமானை விட அதிக வாக்குகள் வாங்கியிருக்க முடியும். இதன் மூலம் அனைத்துக்
கட்சிகளும் கூட்டணிக்கு நம்மைத் தேடி வந்திருப்பார்கள். நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டீங்களே
தலைவா’’ என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

