Share via:
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவா தனது 22 வயது மகனுடன் ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச்சுரங்கம் அருகில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவாவுக்கு சொந்தமான தனிவிமானம் என்று அடையாளம் காணப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் ஒருவர் கோடீஸ்வரர் ஹர்பால் ரந்தாவா என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் இவருடன் பயணித்த இவரது 22 வயதான மகன் அமர் ரந்தாவாவும் உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அமர் ரந்தாவா பயிற்சி பெற்ற விமானி என்று கூறப்படுகிறது.
தங்கம், நிலக்கரி, நிக்கல் மற்றும் தாமிரத்தை சுத்திகரிக்கும் ரியோஜிம் என்ற நிறுவனத்தையும், 33 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜெம் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தையும் உயிரிழந்த கோடீஸ்வரர் ஹர்பால் ரந்தாவா நடத்தி வந்துள்ளார்.
விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், கோடீஸ்வரர் ஹர்பால் ரந்தாவும், அவரது மகனும் ரியோஜிம் நிறுவனத்துக்கு சொந்தமான 206 தனி விமானத்தில் முரோவா வைரச் சுரங்கத்திற்கு சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கியுள்ளனர். அப்போது விமானத்தில் பயணித்த விமானிகள் உட்பட அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரந்தாவாவின் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஹோப்வெல் சினோனோ கூறும்போது, ‘‘என் வாழ்க்கையில் நான் ஒரு போதும் இவரை மறக்கவே மாட்டேன்’’ என்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
