Share via:
போலீசாரைக் கண்டால் மக்களுக்குப் பயம். அதேநேரம், யாரெல்லாம் குற்றவாளி என்று புரியாமல் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வேலை போலீசாருக்கு இருக்கிறது. அதனால் போலீசாரால் மற்ற பணியாளர்கள் போன்று மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை. இந்த குறையைத் தீர்த்துவைக்கும் வகையில் மகிழ்ச்சி திட்டத்தை போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால் தொடங்கி வைத்திருக்கிறார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. சங்கர் ஜீவால் அவர்கள், போலீசாருக்கான மனநல பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ திட்டம் மற்றும் ‘மகிழ்ச்சி நலமையம்’ ஆகியவற்றை துவக்கி வைத்து, அதனை அனைத்து காவல் அதிகாரிகளும், காவலர்களும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “மனஅழுத்தம் நிர்வகிக்கப்படவில்லை என்றால், அது குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடும்” என கூறிய DGP சங்கர் ஜீவால், போலீசார் தங்களின் மனநலத்தை பாதுகாப்பதில் தனிப்பட்டகவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மகிழ்ச்சி திட்டத்தின் மாநில நடப்பு அலுவலரும், மூத்த உளவியலாளருமான டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், இத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மன நோய் தடுக்கும் விழிப்புணர்வு குறித்து விளக்கியுள்ளார். மன பிரளையத்தில் உள்ளவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்..! குறிப்பாக, தாங்கள் தான் உயர்ந்தவர், சட்டத்திற்கும் மேலானவர் என எண்ணம் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
போலீசார்கள் மக்களோடு நட்புறவுடன் இருக்க வேண்டியது அவசியம். மக்களுக்கு உதவுவதே முதன்மை கடமை, நாம் ஆற்றுவது மக்கள் பணி தான், மன்னர் பணி கிடையாது என்ற புரிதல் அவசியம். அனைவரும் 58-60 வயது ஆனால் ரிட்டையர்டு் ஆகிவிடுவோம், அதற்குள் பல்வேறு பதவிகளுக்கு டிரான்ஸ்பர் ஆகிக்கொண்டே இருப்போம் என எதார்த்த மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும். எனவே, மகிழ்ச்சியான மனநிலைக்கு 9500334416 என்ற எண்ணுக்கு போன் செய்து மன ஆரோக்கியம் அடையலாம்.
காவல்துறையினர் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு ‘மகிழ்ச்சி’ திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்! நல்ல முன்னெடுப்பு.