Share via:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும்
நிலையில், மாநிலத்தில் கட்சிப் பணிகளைக் கவனிப்பதற்கு நியமனம் செய்யப்பட்ட ஹெச்.ராஜா
டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவ சந்தித்திருப்பது அண்ணாமலை ஆதரவாளர்களிடம்
அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சந்திப்பு குறித்து ஹெச்.ராஜா, ‘இன்று மத்திய அமைச்சர் அமித்
ஷாவை சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியதை தெரிவித்து வாழ்த்து
பெற்றேன். உறுப்பினர் சேர்க்கையை கிராமங்களில் கொண்டு செல்வதை துரிதபடுத்துவது குறித்து
ஆலோசனைகளை வழங்கினார்கள்’ என்று மட்டும் கூறியிருக்கிறார். ஆனால், இந்த சந்திப்பு கிட்டத்தட்ட
40 நிமிடங்கள் நீடித்ததாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலை மூன்று மாத காலம் படிப்பதற்காக வெளிநாடு செல்வது குறித்து
பேச்சுகள் அடிபட்டு வந்த நேரத்தில், தலைமைப் பொறுப்பு தற்காலிகமாக வேறு யாருக்காவது
வழங்கப்படுமா என்பது குறித்த விவாதங்கள் நடந்துவந்தன. ஆனால், அப்படி யாரும் நியமிக்கப்படவில்லை.
அவரே தொடர்வார் என்று கூறப்பட்டது.
அவர் லண்டன் கிளம்புவதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி மீது மிகப்பெரிய
தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றார். கொலைக்குற்றவாளி, ஊழல்வாதி என்றெல்லாம் எடப்பாடி
மீது புகார் கூறியதையடுத்து, அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டுவிடாமல் நிரந்தரத் தடை விதித்துவிட்டுப்
போனார்.
ஆனால், அதன் பிறகு அண்ணாமலை எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் கட்சி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாக
பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்தார். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக
தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா இருப்பார் என்றும் மாநில துணைத் தலைவர்கள் எம்.
சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன்,
மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
அண்ணாமலை வெளிநாட்டிற்கு புறப்படும் வரை இதுபோல எந்தப் பேச்சும்
இல்லாத நிலையில், இப்படி ஒரு குழு அமைக்கப்பட்டது அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கை என்றே
சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வது போன்று, இந்தக் குழுவில் இருக்கும் அனைவருமே அ.தி.மு.க.
கூட்டணிக்கு ஆதரவாளர்கள். மேலும், அண்ணாமலைக்கு நெருக்கமான நபர்களுக்கு பதவி கொடுக்கப்படவில்லை.
அண்ணாமலை திரும்பி வருவதற்குள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு இணக்கமான
சூழலை உருவாக்க வேண்டும் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதில் ஹெச்.ராஜா
வெற்றி அடைந்துவிட்டால் அண்ணாமலைக்கு தேசியப் பதவி கொடுக்கப்பட்டு ஓரம் கட்டப்படுவார்
என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்
சீனியர்கள் அடுத்தகட்ட திட்டமிடலில் இந்த வாரம் இறங்குகிறார்கள்.
அண்ணாமலை திரும்பிவருவதும் வராமல் போவதும் ராஜாவின் கையில் தான்
இருக்கிறது என்கிறார்கள்.