எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இல்லை என்று துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகப் பேசியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் அரசியல் நிலைப்பாடு கேள்வியாகியுள்ளது.

துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பேசிய குருமூர்த்தி, ’’தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்றார்.திமுகவை தோற்கடிக்க வேண்டும் என எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த உறுதி தற்போதைய அதிமுக தலைமையிடம் இல்லை. பாஜகவும் – அதிமுகவும் சேர வேண்டும் என்ற அவர், எடப்பாடி போன்ற ஒரு தலைவரை வைத்துக் கொண்டு இந்த இணைப்பை எவ்வாறு செய்ய முடியும். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கூடுதலாக 12 சீட் வழங்க ஒப்புக் கொண்டு இருந்தால் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது’’ எனக் கூறினார்.

அதோடு, பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கும் குருமூர்த்தி பாராட்டு தெரிவித்தார். ’’அரசியலில் முதன்முறையாக பெரியாரை நேரடியாக எதிர்த்தற்காக சீமானை நான் பாராட்டுகிறேன். பெரியாரை பற்றி பேசினாலே அவர்கள் மீது பலர் ஒன்று சேர்ந்து பாயும் பழக்கம் கடந்த 50 ஆண்டுகளாக இருக்கிறது. அதனை பத்திரிகை துறையில் உடைத்தவர் சோ, தற்போது சீமான் அரசியலில் உடைத்து கொண்டு இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வினர், ‘’ஓ.பன்னீர்செல்வத்தை தவறாக வழி நடத்தியது நீங்கள் தான். நீங்கள் சொன்னதைக் கேட்டதால் தான அவர் உருப்படாமல் இருக்கிறார். உங்கள் சொல்லைக் கேட்காத காரணத்தாலே இன்று எடப்பாடி பழனிசாமி சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டாம். உங்களை நம்பி ஏமாந்த பன்னீர், சசிகலா, ரஜினி ஆகியோருக்கு வழி காட்டுங்கள்’’ என்று கொந்தளிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link