Share via:
நாம் தமிழர் சீமானும் அவருக்கு நெருக்கமான சிலரும் பாண்டிச்சேரி
ஸ்டார் ஹோட்டலில் தங்கிவிட்டு இடைத்தேர்தல் பிரசாரம் செய்வது கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும்
நிலையில், சீமான் திரள்நிதி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
தேர்தல்ல ஜெயிக்கிறோமா, தோற்கிறோமாங்கிறது முக்கியமில்லை. போராடுவது
தான் நமக்கு முக்கியம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம், மிகப்பெரிய மாநாடு
நடத்தி பணத்தை செலவு செய்ய மாட்டோம் என்று ஆவேசமாக பேசும் சீமான் இடைத்தேர்தல் செலவுக்கு
திரள்நிதி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘’மற்ற கட்சியினர் போன்று நாம் மக்களுக்குப்
பணம் கொடுப்பதில்லை, ஆடம்பரச் செலவு செய்வதில்லை என்றாலும் கட்சிப்பணி செய்வதற்கு கல்யாண
மண்டபங்களில் காத்திருக்கும் நம் உறவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது. மக்களிடமிருந்து
மக்களுக்காகவே வந்த எங்களுக்கு இனமாகவும், பணமாகவும் துணைநின்று எங்கள் வளமாகவும்,
வலிமையாகவும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துவருவது எம் மக்கள் தான்.
ஆகவே, நமக்கு பணம் தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த சிறு தொகையும்
எங்களுக்கு அதிகம் பயன் கொடுக்கும். ஆகவே, முடிந்த நிதியை கொடுத்து உதவுங்கள். அது
மாற்றத்துக்கு ஆரம்பமாக இருக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் அவரது கட்சியினரோ, ‘’விக்கிரவாண்டி தொகுதியில் வீடு எடுத்துக்
கொடுக்கிறோம் என்று சொன்னதைக் கேட்காமல் பாண்டிச்சேரி ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடச்
சொல்கிறார். அவருக்கு மட்டுமின்றி அவருடன் வரும் நபர்களுக்கும் ரூம் போடவேண்டியிருக்கிறது.
அங்கு 17 ஆயிரம் ரூபாய் வாடகையும் அதற்கு வரியும் கட்ட வேண்டும். சாப்பாடு மற்றும்
தண்ணி போன்ற செலவுகளுக்கும் தனியே பணம் கட்ட வேண்டும்.
ஆகவே, ஒரு நாள் சீமான் வந்து பிரசாரம் செய்துவிட்டு அங்கே போய்
தங்கினால் அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
ஆகவே திரள்நிதி கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.
பொதுத் தேர்தலுக்கு திரள்நிதி வசூலிப்பது சரி தான். இதுபோன்ற இடைத்
தேர்தலுக்கும் திரள் நிதி வசூல் எதற்காக..? திரள்நிதிக்கு கணக்கு ஒப்படைக்கப்படுகிறதா
என்றெல்லாம் திராவிடக் கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள்.