Share via:
மூன்றாவது முறையாக பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற பிறகு, தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவி அரசு ரீதியாக பிரதமர் மோடியை சந்திக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு
இணங்க ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர்
ரவி, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாகவே சென்னை திரும்பியதையடுத்து, அவரது பயணம் தோல்வி
அடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2021, செப்டம்பர் 18-ம் தேதி ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநராக
நியமிக்கப்பட்டார். தமிழகத்துக்கு முன்பாக நாகாலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து
கணக்கெடுத்துக் கொண்டால் விரைவிலேயே ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இது குறித்து
பேசுவதற்காகவே கவர்னர் டெல்லி விசிட் என்று கூறப்ப்படுகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 15ம் தேதி குடும்பத்தினருடன் டெல்லிக்குச்
சென்றார். 16ம் தேதி பிரதமர் மோடியையும் 17ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும்
சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஆர்.என்.ரவி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு
சூழலையும், மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு குறித்த சந்திப்பு என்று பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை
சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் எதிர்பார்த்ததற்கு ஒரு நாள் முன்னதாகவே தமிழகம்
திரும்பியிருக்கிறார். ஆகவே, அவரது பயணம் தோல்வியில் முடிந்ததாக கவர்னர் மாளிகை வட்டாரம்
தெரிவிக்கிறது.
இதுகுறித்து பேசியவர்கள், ‘’தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையில்
இணக்கமான சூழல் இல்லை. கவர்னருக்கு உரிய மதிப்பு தருவதற்கு மாநில அரசு விரும்பவில்லை.
ஆகவே, இங்கு தொடர்வது கெளரவக் குறைச்சலாக ஆர்.என்.ரவி கருதுகிறார். தன்னை வேறு ஏதேனும்
ஒரு மாநிலத்துக்கு அல்லது பாதுகாப்பு தொடர்பான துறைக்கு மாறுதல் செய்வதற்கு வேண்டுகோள்
வைத்தார்.
ஆனால், ரவியின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்னும்
கொஞ்ச நாட்கள் பதவியில் தொடருங்கள். விரைவில் தென் மாநிலங்கள் முழுமையாக நிறைய மாற்றங்கள்
செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது உங்கள் கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து நல்ல முடிவு
அறிவிக்கப்படும்’ என்று சொல்லி திருப்பியனுப்பியிருக்கிறார்கள். எனவே, மீண்டும் ஆர்.என்.ரவியே
கவர்னராக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் புதிதாக வீடு கட்டியிருக்கும் ரவி, அங்கேயே பணி தொடரவே
ஆர்வமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.