Share via:
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று
முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசிக்கொண்டு இருந்தாலும் நாள்தோறும் தமிழகத்தில் பல்வேறு
வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. உச்சபட்சமாக இன்று சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு
மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து விழுந்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள்
குரல் கொடுத்து வருகின்றன. சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற
பெண் வணிகர் மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார்.
அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம்
என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன்
என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது. இதுவெல்லாம் போதாது என்று அரசு
மருத்துவமனைக்குள் நுழைந்து கத்திக்குத்து நடந்துள்ளது.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில்
இருந்த மருத்துவர் பாலாஜி, தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கத்தியால்
குத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும்
மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
ஸ்டாலின் இரும்புக்கரம் காணாமல் போய்விட்டதா..? என்ன செய்கிறார்
ஸ்டாலின் என்றே கேள்வி எழுகிறது.