Share via:
ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலைத் தேர்வுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை குறித்தும் பல்வேறு தரப்புகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையில் கடந்த மாதம் (ஜூன்)23ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்வர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். அதன்படி வருகிற ஆகஸ்டு மாதம் 11ம் தேதி நீட் முதுநிலைத்தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இத்தேர்வானது 2 ஷிப்ட்டுகளாக நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் தேர்வெழுதும் மையம், அடையாள அட்டை, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா என்று தேர்வர்கள் சலிப்படைந்துள்ளனர். இருப்பினும் தேர்வுக்கு மேலும் படிக்க கால அவகாசம் கிடைத்துள்ளதாக நேர்மறையாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.