Share via:
பாடலுக்கு இசையா, இசைக்குப் பாட்டா என்று பேசியிருந்த வைரமுத்துக்கு
எதிராக இளையராஜாவின் தம்பி கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர், ’நாங்க கொடுத்த
பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. நான் ஒரே
ஒரு தம்பி தான்.. என்ன நடக்கும்னே தெரியாது. வைரமுத்து நல்ல மனிதர் இல்லை… புத்தியும்
இல்லை. வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிடுச்சு… என்றெல்லாம் விளாசியிருந்தார்.
நாங்க வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து ஜீரோ என்று கூறியிருந்ததற்கும்
கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சு அருணாசலம் வாய்ப்பு தரவில்லை என்றால்
இளையராஜா ஜீரோ என்று குரல் எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, ’மெட்டுக்கு
பாட்டா? பாட்டுக்கு மெட்டா? மொழியா? இசையா? என்கிற விவாதம் நீண்ட நெடுங்காலமாக இருந்து
வருகிறது. கங்கை அமரன் அவர்கள் கூட சிறந்த பாடலாசிரியர் தான்.அவர் பாடல் எழுதும் போது
ஆதிக்கமில்லாத இசை இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார். ஆனால்,இதை புரிந்து கொள்ளாமல்
வைரமுத்துவை இழிவுபடுத்தும் விதமாக பேசுவது
வருத்தமளிக்கிறது. கங்கை அமரன் தனக்கு பின்னால் சனாதனக்கும்பல் இருக்கும் திமிரில்
இப்படி பேசுகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.’ என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், கவிஞர் மகுடேஸ்வரன் பாடலுக்கு இசையை விட மொழியே முக்கியம்
என்று கூறியிருக்கிறார். திரைப்பாடலில் இசையமைப்பாளரின் வேலை என்பது பாடலுக்குப் பக்கத்தாளம்
போடுவதுதான். முதற்கண் பாடல் என்பதே இசைமொழிதான்.
பாடல்கள்தாம் எல்லாம். பாடல் என்பது மொழி – மொழித்தொடர்கள். மொழித்
தொடர்களுக்கு இசைவாகு கற்பிக்கும் செயல்தான் மெட்டு. மெட்டுக்குள் அடக்கிய மொழித்தொடர்கட்கு
மேன்மேலும் இன்பமூட்டும் ஒலிகளைச் சேர்க்கும் வேலைதான் பிற கருவிகளின் பின்னிசைப்பு.
இவை யாவும் சேர்ந்து தூக்கி நிறுத்துவது பாடல் வரிகளைத்தான்.
பாடல் வரிகள்தாம் துணி. இசை என்பது அதற்கு ஊட்டப்பட்ட நிறம். பாடல்
வரிகள்தாம் சேலை. இசை என்பது அதற்கு அழகூட்டச் சேர்ந்த விளிம்பு வேலைப்பாடு. மக்களுக்கு
முதலில் மொழிதான் வேண்டும். இசை அதன் பிறகுதான் தேவைப்படும். அதனால்தான் தமிழ்நாட்டில்
வேற்றுமொழிப் பாடல்கள் புகழ்பெறுவதில்லை.
பாடல் என்பது “பழம் நீயப்பா ! ஞானப்பழம் நீயப்பா !” என்னும் மொழித்தொடர்தான்.
இசையால் ஒரு பாடல் தொடர் நினைவில் நிற்கும். தலைமுறை தாண்டிய பிறகு இசையின் புத்தழகு
குறையலாம். ஆனால், பாடல் வரிகளின் மொழிச்செப்பம் குன்றுவதில்லை.
சங்கப்பாக்கள் இசைப்பாடல்கள்தாம். திருக்குறள் செப்பலோசைப் பாக்கள்தாம்.
மரபில் எழுதப்பட்ட அனைத்துமே இசைப்பாக்கள்தாம். அவை எழுதப்பட்ட காலத்தில் இசையோடு பாடப்பட்டவைதாம்.
இன்றுவரைக்கும் அவ்விசை தொடர்ந்து வரவில்லையே. நாமாக அவற்றை இசைத்துப் பாடினால்தான்
உண்டு.
இசையமைப்பாளர் என்பவர் பாடல் இயற்றுநரின் கீழ்வருபவர் என்பதனைப்
புரிந்துகொள்க. (திரையுலகில் இவையாவும் தலைகீழாக நடக்கின்றனதாம். அவ்வுலகில் எல்லாம்
அப்படித்தான்.) திரைக்கலையின் அறிவியல் வளர்ச்சியாலும், பின்னணி இசைக்கோப்பின் பெருந்தேவையினாலும்
ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளர் முன்னணிப் பங்களிப்பினை நல்கக்கூடும்.
ஆனால், ஒரு பாடலைப் பொறுத்தவரையில் பாடல் இயற்றுநரே தலைமைப் படைப்பாளி
என்று கூறியிருக்கிறார்.