Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2024/03/durai-vaiko.jpg)
’உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், செத்தாலும் எங்கள்
தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’ என்று மேடையில் கண்கள் கலங்கி சென்டிமென்ட்
ஆக துரை வைகோ பேசியதற்கு கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சி கொடுத்த அழுத்தமே காரணம்
என்றே கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதிமுகவுக்கு
வழங்கப்பட்ட ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு இந்த நாடாளுமன்ற
தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகவே திருச்சியில் துரை வைகோவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மார்ச் 24ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு
தற்கொலைக்கு முயற்சி செய்யவே, அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
தகவல் அறிந்ததும் வைகோ மருத்துவமனைக்கு வைகோ நேரில் சென்று நலம்
விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘கட்சியிலே அனைவரும் சேர்ந்து
துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை சான்ஸ்
கொடுப்போம் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி
ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய
நினைத்தேன். இப்போது வாய்ப்பு இல்லை என்றாலும் அவரை எம்.எல்.ஏ. ஆக்கிவிடும் எண்ணத்தில்
இருந்தேன். நான் அவரிடம் இதை பேசிய போது எந்த பதற்றமும், சோகமும் காட்டவில்லை. ஆனால்,
அதற்குள் இப்படி நடந்துவிட்டது’’ என்று வருந்தினார்.
இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்
உள்ள கணேசமூர்த்தியை துரை வைகோவும் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,
‘கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன்.
தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும்
தெரிவிக்கவில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி கணேசமூர்த்திக்கு
தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இப்படி
ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது” என்று துரை வைகோ தெரிவித்தார்.
தற்போதைய தேர்தலிலும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க சார்பில் ஈரோடு
தொகுதியி்ல போட்டியிடுவார் என, கணேசமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், வாய்ப்பு துரைவைகோவிற்கு போனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இன்னமும் ஆபத்தான கட்டத்திலே கணேசமூர்த்தி இருக்கிறாராம். அவருக்கு
சிக்கல் நேர்ந்தால், அது ம.தி.மு.கவுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும்.