Share via:
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவும், முருகனை தரிசனம் செய்யவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி பூஜை இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இவ்விழாவின் போது யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளல், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டு, மேள தாள வாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தல், சுவாமிக்கு தீப ஆராதனை ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற உள்ளது.
மேலும் கந்த சஷ்டி விழாவின் மிக முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.