Share via:
கடந்த கால சாதனைகளை சுட்டிக்காட்டி அ.தி.மு.க.வினர் சொல்லி வாக்கு
சேகரித்துவரும் நிலையில் பா.ஜ.க.வினர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சாதனைகளைச்
சொல்லி வாக்கு சேகரிப்பதைக் கண்டு எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயிருக்கிறார்.
எனவே, ஜெயலலிதாவையும் எம்.ஜி.ஆரையும் நினைவூட்டி கடைசி நேரத்தில்
கழகத் தொண்டர்களுக்கு ஆவேசக் கடிதம் அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதில்,
‘கழக உடன்பிறப்புகளே, உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர்
இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற
மக்களவையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக
நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த பிராசாரத்தின் கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன.
ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும்
பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது. நமது இயக்கத்தை
பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம்
ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும்
விஷ அம்புகளையும், ஆளும் கட்சிக்கு இருக்கும் அதிகார மமதையில் நடத்தப்படும் அருவருக்கத்தக்க
ஏற்பாடுகளையும், 1972-ல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நாம் பார்த்துக்கொண்டு
தானே இருக்கிறோம்? இத்தகைய கோழைத் தனங்களைத் தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று
வருகிறோம்?
நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை.
நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே.
அ.தி.மு.க. என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப் பார்க்கும்
இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும். இந்த தேர்தலில் நமது அர்ப்பணிப்பும்,
உழைப்பும், ஈடுபாடும் பல மடங்கு இருக்க வேண்டும். துவளாமல், அஞ்சாமல், அயராமல் ‘வெற்றி
ஒன்றே’ நம் இலக்காகக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். வெற்றி நமதே’
என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், இந்த தேர்தலில் பகுதி நேரம் மட்டுமே செயலாற்றும் நான்கு
மாஜி அமைச்சர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருக்கிறார். அவர்களில் அமைச்சர் காமராஜ்,
கே.சி.வீரமணி, ராஜேந்திரபாலாஜி, செங்கோட்டையன் ஆகியோர் முக்கியமானவர்கள். கே.சி.வீரமணிக்கும்
தி.மு.க. அமைச்சர் துரை முருகனுக்கும் இடையில் பிசினஸ் டீலிங் இருப்பதால் அந்த தொகுதியில்
சுணக்கம் காட்டுகிறாராம்.
அதேபோல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் டீலிங் வைத்துக்கொண்டு
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனை ராஜேந்திரபாலாஜி கண்டுகொள்வதில்லையாம். மாஜி அமைச்சர்கள்
காமராஜ், செங்கோட்டையன் போன்றவர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வது தவிர, பிரசாரத்துக்குச்
செல்வதில்லையாம். இதெல்லாம் நல்லா இல்லீங்க என்று அன்போடு கடிந்துகொண்டாராம் எடப்பாடி
பழனிசாமி.
இவையெல்லாம் முன்கூட்டியே செய்திருந்தால் கொஞ்சமாவது இலை தேறியிருக்கும்,
இப்போது பேசி என்ன செய்வது என்று அவரது கட்சியினரே புலம்புகிறார்கள்.