Share via:
அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் கூட்டணிக்கு
அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. அதோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் கூட்டணி
இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா
கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இஷ்டம் இல்லாமல் நடத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம்
இது என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ‘12 தேர்தலுக்குப் பிறகு
எடப்பாடிக்கு கிடைச்ச மாபெரும் வெற்றி. நாங்க நினைச்ச மாதிரி அண்ணாமலையை பதவியில் இருந்து
தூக்கியாச்சு. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை எல்லாம் கட்சிக்குள் சேர்க்கவே இல்லை.
இது எடப்பாடி பழனிசாமியின் மாபெரும் ராஜதந்திரம் என்று குதூகலப்படுகிறார்கள்.
இப்படித்தான் கூட்டணி அமையும் என்று கூறிவந்த உடன்பிறப்புகள்,
‘’எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் இரும்புக் கோட்டை போன்று நிலை நிறுத்தப்பட்ட
கட்சிக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. கூட்டணிக் கட்சியினர் போயஸ் தோட்ட
வாசலில் கால் கடுக்க நின்றாகள். ஆனால், இப்போது ஹோட்டலில் வைத்து அமித்ஷா கூட்டணி அறிவிப்பு
வெளியிடுகிறார். அருகில் எடப்பாடி பழனிசாமி அமைதியாக அமர்ந்திருக்கிறார். இதைப் பார்க்கும்போதே
கட்டாயம் கல்யாணக் காட்சிகளே ஞாபகம் வருகின்றன.
சூழ்நிலை காரணமாக ஒருமுறை தவறுசெய்து பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்.
இனி எந்த காலத்திலும் சேரமாட்டோம் என்று கடந்த தேர்தலில் வெளியேறினார் எடப்பாடி பழனிசாமி.
தொண்டர்களும் வரவேற்றனர். இப்போது ரெய்டு அச்சம் மற்றும் சுயநலத்துக்காக மொத்தமாக கட்சியை
அடகு வைத்து விட்டார். கூட்டணி அறிவிப்பில் அமித் ஷா மட்டுமே பேசினார். எடப்பாடி கைகட்டி
வாய் மூடி இருந்தார். இது அதிமுக எனும் பேரியக்கத்திற்கு நேர்ந்த அவமானம்’’ என்கிறார்கள்.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ’’பொது எதிரி தி.மு.க.வை
அழிக்க வேண்டும் என்றால் யாருடனும் கூட்டணி சேரலாம். மத்தியில் வலுவுடன் இருக்கும்
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை என்றால் வெற்றி கிடைக்காது. கடந்த 2021 தேர்தலில் வெறும்
3% வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தனது 10 ஆண்டு கால ஆட்சியை இழந்தது. இங்கு கட்சிகளின்
ஓட்டு சதவீத கணக்குகள்தான் ஆட்சியை தீர்மானிக்கிறது. அந்த கணக்குதான் திமுக கூட்டணியை
பிரிந்துவிடாமல் பாதுகாக்கிறது. இந்த முறை அப்படி நடக்காது. எடப்பாடி பழனிசாமி இப்போதே
கூட்டணி அறிவிப்பு வெளியிட்டுவிட்டதால் வெற்றி நிச்சயம்’’ என்கிறார்கள்.
பா.ஜக.வினரும், ‘’பங்குனி உத்திரம் நன்னாளில் கூட்டணி அறிவிக்கப்பட்டதே
வெற்றியின் அறிகுறி தான். தெய்வங்களின் செயல் அதர்மத்தை அழிப்பது. தெய்வ சங்கல்பமாக
உருவாகியுள்ள பாஜக-அதிமுக கூட்டணி அதர்மத்தின் முழு உருவான திமுக-காங்கிரஸ் கூட்டணியை
அழிப்பதுடன், அதை நிர்மூலமாக்கி காற்றில் கரைய வைக்கும் கூட்டணியாக மாறும்….’’ என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி வாயைத் திறந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.