Share via:

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே தேர்தலில் நின்றால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கொண்டு இருந்தார். ஆனால், ஸ்டாலினை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி அறிவிப்பு வெளியிட்டார்கள்.
கூட்டணி அமைந்துவிட்டது என்றாலும் ஒரு வகையில் இது ஒரு கட்டாயக் கல்யாணம். எனவே இன்னமும் இரண்டு கட்சிகளும் முறைத்துக்கொண்டு இருக்கின்றன. கூட்டணியை எந்த நேரத்திலும் முறித்துக்கொள்வார் எடப்பாடி பழனிசாமி என்ற பயம் அமித்ஷாவுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்காகவே அண்ணாமலையை அனுப்பிவிட்டு நயினார் நாகேந்திரனை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான திருப்தி இல்லை என்பதே உண்மை.
கூட்டணியில் இருந்து விலகினால் ரெய்டு, கைது என்று பயமுறுத்தியே எடப்பாடி பழனிசாமியை சம்மதிக்க வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே இரண்டு கட்சிகளும் ஒரே வீட்டுக்குள் பேசாமல் இருக்கும் புருஷன் பொண்டாட்டி போன்று முறைத்துக்கொண்டு திரிகிறார்கள். எப்படியாவது எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்ட விஜய்யும் இந்த கூட்டணியால் செம அப்செட்.
எதிரே பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன என்றாலும் ஆளுக்கொரு மனப்பான்மையில் இருப்பதால் ஸ்டாலின் செம ஹேப்பியாக இருக்கிறார். தேர்தலுக்காவது ஒன்றாக சேர்ந்து நின்று ஸ்டாலினைத் தோற்கடிப்பார்களா?