Share via:
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று நாடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பும், பாராட்டும் கிடைப்பது வழக்கம். வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் ஒரு பரிசும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பிய வினேஷ் போகத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் வினேஷ் போகத். இதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் நிச்சயம் கிடைப்பது உறுதீயாகியிருந்தது. ஆனால், திடீரென 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்த மனுவை விசாரித்த நடுவர் மன்றம், இதனை தள்ளுபடி செய்துவிட்டது.
எனவே தோல்வியடைந்த சோகத்துடன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகத்துக்கு வந்தார். அங்கு அவர் எதிர்பார்க்காத அளவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். பின்னர் அவர் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு மலர் தூவப்பட்டன.
தன்னை வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்ததும் வினேஷ் போகத் கண் கலங்கினார். கைகளைக் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். “நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! துரதிருஷ்டவசமாக நான் வெற்றிபெற முடியவில்லை” என்று செய்தியாளர்களிடம் கண் கலங்கப் பேசினார்.
நியாயத்துக்கான உங்கள் போராட்டத்தை விட எந்தப் பதக்கமும் பெரியதில்லை வினேஷ் போகத்.