Share via:
திருநெல்வேலியில் பெய்த வரலாறு காணாத பெருமழையை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பெல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு இரவு உணவை வழங்கினார். அப்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.