தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். இந்த விழாவில், மீனவப் பெண்கள் 64 பானைகளில் பொங்கல் வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 65வது பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிறகு, வரவேற்பு நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து, அவர் மீனவ மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

அவர்களுடன் ஆளுநர் பேசுகையில், ‘’எனது இதயத்துக்கும் பிரதமரின் இதயத்துக்கும் நெருக்கமானவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மீனவர்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள், எவ்வளவு சவாலான பணியை செய்கின்றனர் என்பது எனக்கு தெரியும். மீனவர்கள் படும் துன்பங்களுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்’’ என்று கூறினார்.

இந்த நிலையில் கடலில் பாலம் கட்டும் தமிழக அரசின் திட்டத்துக்கு மீனவர் சங்கத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர், ‘’கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதியில் பாலம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பாலம் கட்டப்பட்டால் 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வரும் 2050-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேலும், கடற்கரையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் அது கடல் அரிப்புக்கு வழி வகுக்கும். அத்துடன், கடல் பகுதியில்
பாலம் கட்டினால் கடலில் மீன்பிடிக்க சென்று இரவு நேரத்தில் திரும்பும் மீனவர்களின் படகுகள் பாலத்தின் தூண்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே, இப்பாலம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இப்போது தெரிவித்ததற்கும் கவர்னர் வருகைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று தி.மு.க.வினர் சந்தேகிக்கிறார்கள். பரந்தூர், சிட்கோ, எண்ணூர், டங்க்ஸ்டன் என எல்லா திட்டங்களும் எதிர்ப்புகள் வருவதைப் பார்த்தால் வளர்ச்சி என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link