Share via:
விஜய் அரசியல் மாநாட்டில் கண்டிப்பாக தி.மு.க. எதிர்ப்பு இருக்கும்
என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது என்றால்,
அது ஆட்சியில் பங்கு என்ற புதிய கோட்பாடு. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சிகளைக் கவர்வதற்காக போடப்பட்ட ஸ்கெட்சியில் புதிய தமிழகம் சிக்கியிருக்கிறது.
இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒருபோதும்
கூட்டணியில் பங்கு கொடுப்பது குறித்துப் பேசுவதே கிடையாது. மைனாரிட்டி அரசாக கருணாநிதி
ஐந்து ஆண்டு காலத்தையும் நிறைவு செய்தாரே தவிர, கூட்டணிகளுக்கு ஆட்சியில் இடம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாகப் பேசி மற்ற கட்சிகளுக்கு
அழைப்பு விடுத்திருக்கிறார்.
திருமாவளவன் சமீபத்தில் எழுப்பிய, ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்
பங்கு’ என்ற அதே குரலில் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். உடனடியாக இதற்கு விசிகவின்
அர்ஜுன் ஆதவ், ‘’நாங்கள் எழுப்பிய அதே கோரிக்கையை விஜய் எழுப்பியிருக்கிறார். தமிழகத்தில்
மாற்றம் நிகழப்போகிறது’ என்று புல்லரிப்பு காட்டியிருந்தார். ஆனால், திருமாவளவன் எதுவும்
கருத்து தெரிவிக்கவில்லை. அதேநேரம் ரவிக்குமார், வன்னியரசு போன்றவர்கள் விஜய்யை நம்பமுடியாது
என்றே சொல்லி விஜய் அரசியலை கிழித்துப் போட்டார்கள்.
இந்த நிலையில் விஜய் அழைப்புக்குப் பதில் கொடுக்கும் வகையில் கூட்டணி
ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்து விஜய்க்கு வாழ்த்து கூறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின்
தலைவரும் நிறுவனருமான டாக்டர் கிருஷ்ணசாமி. இது குறித்து கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம்,
‘அண்மையில் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தம்பி விஜய் இன்று வெற்றிகரமாக
நிறைவு செய்துள்ளார்.! அவருக்குப் பாராட்டுக்கள்.!! தமிழ்நாட்டில் கடந்த 75 வருடத்தில்
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி
குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்ட பொழுதும் ஆட்சியில்
எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை.
ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக
கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார். புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நாள்
முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும்
பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும்
தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும்,
குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.’’
என்று நேரடியாகவே சரண்டர் ஆகியிருக்கிறார்.
திருமாவளவனுக்கு ஆசைப்பட்டா கிருஷ்ணசாமி வந்து மாட்டுகிறாரே…