வடக்கு மாநிலங்கள் போன்று தமிழகத்தில் மதக் கலவரங்கள் நடந்தது இல்லை. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் மலை மீது இருக்கும் தர்காவை வைத்து தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி உள்பட பல இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமின்றி, முன்னெச்சரிக்கையாக பலரையும் கைது செய்திருப்பது ஏரியாவை களேபரமாக்கி வருகிறது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் இந்து முன்னணி ஆதரவாளர்கள், ‘’தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து கோவில்கள் இடிப்பு மற்றும் கோவில் வருமானங்களை மற்ற செலவினங்களுக்கு உட்படுத்துதல் உள்பட பல்வேறு இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும், வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முருகனின் முதல்வீடான, திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் இந்துக்கள் மனதை புண்படுத்தியது.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி  இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் மற்றும் தண்டோரோ போட்டனர். தண்டோரா போட்டவர்கள் தொடங்கி பலரையும் காவல் துறை கைது செய்து இந்துக்களை முடக்கும் வேலையை செய்துவருகிறது. 144 தடை சட்டம் போட்டிருப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல், நாங்கள் தடையை மீறி போராடுவோம்’’ என்கிறார்கள்.

இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள தனி செய்திக்குறிப்பில். “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக இரு வேறு பிரிவினர் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டும், அதனால் இரு பிரிவினர்களை சேர்ந்தவர்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இரு பிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்த முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவரம் தெரிந்தும் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும், தண்டோராக்கள் போட்டும் திருப்பரங்குன்றத்துக்கு அதிகளவில் பொதுமக்களை திரட்டும் செயல்களில் இந்து முன்னணி இயக்கத்தினர் ஈடுபட்டு வருவது தெரிகிறது.

திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கை பாராமரிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங் குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். மீறி வருபவர்கள் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் சட்டப்படியான எடுக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை முழுவதும் பல்வேறு அமைப்புகள், ரசிகர்கள் பெயரில் போஸ்டர் அடித்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. களத்தில் இல்லாத ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த போஸ்டர் கலாசாரத்துக்கு முடிவு கட்டவில்லை என்றால் மதக்கலவரத்தை தடுக்க முடியாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link