Share via:
வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 21ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை அக்டோபர் 23ம தேதிக்குள் பெற்றுக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணைம் அறிவித்துள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 23ம் தேதிக்கு பதில் 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பின்னர் மாற்றி அறிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை நவம்பர் 7ம் தேதியும் 17ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும், தேர்தல் முடிவுகளும் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியிடப்பட உள்ளது.