Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/MergedImages-2025-02-13T112551.028.jpg)
விஜய் கட்சியின்
தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என்று தெரியவந்திருக்கும் நிலையில்,
பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து இரண்டு பக்கமும் ;பற்றி எரிகிறது.
செய்யாறு ஒருங்கிணைந்த
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சீமான், ‘’தமிழகத்தில் மக்களுடன்
கூட்டணிவைத்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில்
பணநாயகம் வென்றிருக்கிறது. விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்களில்
எனக்கு நாட்டமில்லை. ஏற்கெனவே நாட்டில் சிறப்பாக ஆட்சி புரிந்த முன்னோர்கள் எந்த
வியூகமும் வகுக்கவில்லை. காமராஜர், அண்ணா போன்றவர்கள் வியூக வல்லுநர்கள் உதவியுடன்
தேர்தலில் வெற்றி பெறவில்லை.
நாடு, மக்கள், நிலம்
குறித்தெல்லாம் தெரியாமல் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? எந்தெந்த தொகுதியில்
யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பதுகூட தெரியாதா? எனக்கு மூளை அதிகம் உண்டு.
பணம்தான் இல்லை. எனவே, எனக்கு வியூக வல்லுநர் உதவி தேவையில்லை. பிரசாந்த் கிஷோருக்கு
தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும். பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்குத்தான்
தேர்தல் வியூகமும் தேவைப்படுகிறது..’’ என்று கூறினார்.
இதையடுத்து விஜய்
நிர்வாகிகள் கடுமையாக கருத்து தெரிவித்தார்கள். திரள் நிதி என்ற பெயரில் பணம் சுருட்டும்
கொள்ளைக் கும்பல் என்று சீமானை வர்ணித்தார்கள். அதோடு கடந்த 2021 தேர்தலில் ஜான் ஆரோக்கியசாமி
நாம் தமிழர் கட்சிக்காக வேலை செய்தார்கள் என்று சில ஆதாரங்கலைப் போட்டார்கள்.
அதோடு, நாம் தமிழர்
கட்சியினர் இதுவரை 125 கோடி ரூபாயை தேர்தலுக்குச் செலவு செய்திருப்பதாக ஒரு கணக்கு
போட்டிருக்கிறார்கள். அதாவது 2016, 2019, 2024, 2026 ஆகிய தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர்
எல்லா தேர்தலிலும் டெபாசிட் பறிகொடுத்திருக்கிறார்கள். அந்த டெபாசிட் தொகையும், தேர்தல்
செலவுக்குப் பயன்படுத்திய தொகையும் 125 கோடியைத் தாண்டுகிறது;. அடுத்தவர் காசை ஆட்டையப்
போடும் சீமான் எங்களைப் பற்றி பேச உரிமை இல்லை என்று காட்டமாகப் பேசுகிறார்கள்.
இதற்கு பதிலடி தரும்
நாம் தமிழர் டீம், ‘’திரள் நிதி என்பது ஏழை, எளியோரிடம் 100 ரூபாய், 200 ரூபாய் என்று
வாங்குவது. நாங்கள் பிளாக் டிக்கெட் விற்பனை செய்யவில்லை. பிளாக் மணி வாங்கி நடிக்கவில்லை.
உங்கள் கொள்கை தலைவர் பெரியாரை சீமான் விமர்சனம் செய்தபோது நீங்கள் பேசவில்லை. ஆனால்,
பிரசாந்த் கிஷோரை தொட்டதும் பேசுகிறீர்கள். அப்படியென்றால் பிரசாந்த் கிஷோர் தான் உங்களுடைய
தலைவரா.. திராணி இருந்தால் தெம்பு இருந்தால் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்திக்காட்டுங்கள்’’
என்று கிண்டல் செய்கிறார்கள்.
இந்த சண்டை சோஷியல்
மீடியாவில் செம வைரலாகி வருகிறது. இதை உடன்பிறப்புகள் மகிழ்ச்சியோடு ரசித்துவருகிறார்கள்.