Share via:
விஜய் கட்சி ஆரம்பித்து
ஒரு வருடம் முடிவடைந்திருக்கிறது. இப்போதுதான் நிர்வாகிகள் நியமனம் நடைபெறுகிறது. அதற்குள்
ஜாதி, பணம் பார்த்து பதவி கொடுக்கப்படுகிறது என்று வெளிப்படையாக வீடியோ மூலம் குற்றச்சாட்டு
வைக்கப்படுகிறது. குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி மீது பா.ஜ.க. பாணியில் ஆபாச அர்ச்சனை
செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தைச்
சேர்ந்த சத்யா நந்தகுமாருடைய வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. போலீஸ்
கேஸ் இருக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டை சொல்லி இவருக்கு கிடைக்க இருந்த பதவி
நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பதை சத்யா வெளிப்படையாகப் பேசி வீடியோவாக
வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ‘நான் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வித களங்கமும்
ஏற்படுத்த இச்செய்தியை பதிவிடவில்லை, என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு தளபதி
விஜய் அண்ணாவிடம் மட்டுமே நியாயம் கிடைக்கும் என இந்த கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன்..!’
என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், விஜய் கட்சியினர்
சிலர் இப்படி வீடியோ வெளியிட்டதற்காக சத்யாவுக்கு தொடர்ந்து ஆபாசத் தாக்குதல் கொடுத்துள்ளனர்.
அதோடு, கண்டனம் தெரிவித்தும் அவதூறும் கிளப்புகிறார்கள்.
அதேநேரம் விஜய் ரசிகர்கள்
சிலர், ‘’சத்யாவின் கோரிக்கையை தலைமை உடனடியாக விசாரிக்க வேண்டும் அவர்களின் கோரிக்கை
நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். உழைத்தவருக்கே
முன்னுரிமையும் அளிக்கும் கட்சி என்றே தளபதியும் கூறுவார். அதுவும் பெண்களுக்கு முன்னுரிமை
கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
சத்யா அவர்கள் மக்கள்
இயக்கத்திற்காக 7 வருடம் உழைத்துள்ளார், கட்சிக்கும் பல முன்னெடுப்பு எடுத்துள்ளார்.
இது நாங்கள் சமூகவலைதளங்கள் மூலமாக கண்டுள்ளோம். அப்படி அவரின் மேல் போலீஸ் கேஸ் இருக்கிறது
என்றால் அவரிடம் ஊர்ஜிதம் செய்யுங்கள். தகுந்த ஆதாரங்களை சத்யா விடம் காண்பியுங்கள்.
அப்போது அவர்கள் சொல்லும் எதுவும் செல்லுபடி ஆகாது…’’ என்று ஆதரவு கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் கட்சியில்
சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளரே இந்த சத்யா என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு கட்சியை
அதிர வைத்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..?