Share via:
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த கு.க.செல்வம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், ‘‘வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க.செல்வம் என்று கூறிய அவர், புன்சிரிப்பும், வாஞ்சையும் நிறைந்த அவரது பேச்சை இனி கேட்க முடியாது என்று எண்ணும் போது நெஞ்சம் விம்முகிறதாக தெரிவித்திருந்தார்.
மேலும் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு மறைந்த தலைவர் கருணாநிதியின் அன்புத் தம்பிகளில் ஒருவராக கு.க.செல்வம் விளங்கியதாக மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். இடையில் சிறிது காலம் தடம் மாறி சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கு.க.செல்வத்தின் மறைவு என்பது அவரது குடும்பத்துக்கும் கழகத்துக்கும் மட்டுமல்ல தனிப்பட்ட தனக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த இரங்கல் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.