Share via:

சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில்
ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வட மாநில குற்றவாளிகளை அலறவிட்டுள்ளது
சென்னை போலீஸ்.
நேற்று முதல் செயின் பறிப்பு சம்பவம் சைதாப்பேட்டையில் காலை 6
மணியளவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் ஐந்து
சம்பவங்கள் விரைவாக பதிவாயின. உடனடியாக செயல்பட்ட காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு
செய்து, நகரில் 56 இடங்களில் வாகன சோதனை நடத்தியது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து
கிடைத்த தகவல்களும், விசாரணையும் இந்த இருவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை
உறுதி செய்ததால், சென்னை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.
சென்னை விமான நிலைய காவல் ஆய்வாளர் பாண்டியின் விசாரணையில், இரண்டு
பேர் அவசரமாக ஹைதராபாத் செல்ல டிக்கெட் வாங்க முயன்றது தெரியவந்தது. ஒருவர் டிக்கெட்
வாங்கிய நிலையில், மற்றொருவருக்கு அடையாள ஆவணங்களில் பிரச்னை இருந்ததால் டிக்கெட் கிடைக்கவில்லை.
ஹைதராபாத் செல்லும் விமானம் புறப்பட இருந்த நிலையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளருடன்
தேவையான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. பாண்டி விமானத்தில் நுழைந்து
முதல் குற்றவாளியை கைது செய்தார்.
மற்றொருவர் மும்பை செல்ல டிக்கெட் வாங்கி புறப்பட காத்திருந்தபோது
பிடிபட்டார். நகர காவல்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆர்பிஎஃப் அதிகாரிகள் மூன்றாவது
நபரை ஓங்கோல் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். காவல்துறையின்படி, சாஸ்திரி நகர், கிண்டி,
திருவான்மியூர், சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பொதுவாக கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக
கை, கால் உடைப்பு நடக்கும். ஆனால், முதன்முறையாக கொள்ளையடித்த நபர் என்கவுண்டரில் சிக்கியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் ஜாபர், சென்னை தரமணியில் சம்பவம் நடந்த
இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டான். திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய அழைத்துச்
சென்ற போது ஜாபர் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக
சொல்லப்படுகிறது.
காவல்துறையின் அறிக்கையில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள்
ஜாஃபர் குலாம் உசைன் இரானி மற்றும் மிசாமும் துஷ்வாசம் மெசாம் இரானி என அடையாளம் காணப்பட்டனர்.
ஓங்கோலில் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் சல்மான் உசைன் என அடையாளம் காணப்பட்டார்.
மூவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட
இருவரும், திருடப்பட்ட பைக்கைப் பயன்படுத்தி, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் வழி கேட்பது
போல் நடித்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 27.5 சவரன் தங்கத்தை திருடியதாகவும்,
இது தற்போதைய சந்தை மதிப்பில் (22 காரட்) ₹17 லட்சம்
மதிப்புடையதாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பதும்,
அதில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதைக்
காட்டுகிறது என்று தி.மு.க.வினர் தெரிவிக்கிறார்கள். அதேநேரம், தமிழகத்தில் சட்டம்
ஒழுங்கு சரியில்லை என்று பா.ஜ.க.வினர் குரல் கொடுத்துவரும் நிலையில், அவர்களே வட மாநில
குற்றவாளிகளை இறக்குமதி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தலுக்குள்
இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..?