புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரில் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகள் செய்வது தான் மனிதாபிமான அரசியல். ஆனால், புதிதாக அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நடிகர் விஜய் புத்தம் புது ஸ்டைலில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பனையூர் இல்லத்துக்கு வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்குகியது கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

அதோடு நடிகர் விஜய், ‘’உங்கள இடத்திற்கு வந்தால்..இப்படி சகஜமாக அமர்ந்து பேச முடியாது. அதனால்தான் கட்சி ஆபீஸ்க்கு வர சொன்னேன்’’ என்று கூறியதற்கு, ‘’பாதிக்கப்பட்ட மக்கள் சகஜமாகப் பேசவும் செல்ஃபி எடுக்கவும் விரும்புவார்களா?

உண்மையான மக்கள் தலைவன்.. களத்திற்கு உடனே சென்று கண்ணீரை துடைக்க வேண்டும். நான் உங்களுடன் உள்ளேன் எனும் நம்பிக்கை தர வேண்டும். உடனடி ஆறுதலும், உடனடி உதவியும் செய்பவனே உண்மையான தலைவன். ஆபீஸில் 300 பேரை சந்தித்தால்.. நேரில் 3000 பேரையாவது சந்திக்கலாம். சேற்றில் கால் வைக்க மனம் வரவில்லையா? நேரில் சேன்றால்தானே பாதிப்பின் உண்மைத்தன்மை முழுமையாக தெரியும்? உங்களை விட வயதான தலைவர்களே நேரில் செல்லும்போது.. நீங்கள் ஆபீஸில் அமர்ந்து சகஜமாக உரையாடுவதா? யார் உங்களுக்கு ஆலோசனை சொல்வது, முதலில் அவரை மாற்றுங்கள்’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், தான் செய்வதை நியாயப்படுத்துவது போலவே நேற்று மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘’புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?

மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்?

மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது. எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை’’ என்று கண்டிப்பு காட்டியுள்ளார்.

அடுத்து ஸ்விக்கி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாலும் ஆச்சர்யம் இல்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link