Share via:
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு ரவிக்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த 59 வயதான ரவிக்குமார் நேற்று காலை (செப்3) வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். மீனம்பாக்கம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த அவர், காலை 11.15 மணியளவில் திடீரென்று சாலையோரமாக மயங்கி கீழே விழுந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு போலீஸ் ஏட்டு ரவிக்குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், முதல்நிலை காவலர் ரவிக்குமாரின் மரணச் செய்தி தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணியாற்றிய காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ரவிக்குமாரின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு பொதுமக்களின் பாராட்டுதல்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.