Share via:
ஹரித்துவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை
சந்தித்துத் திரும்பினார் செங்கோட்டையன். அதேபாணியில் துணை குடியரசுத் தலைவரை வாழ்த்தப்போகிறேன்
என்று டெல்லி கிளம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.
எழுச்சிப்பயணம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமி அதனை ரத்து செய்துவிட்டு
நாளை டெல்லிக்குச் செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு
சிக்கல்களை இந்த கூட்டணி தொடர்ந்து சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக எடப்பாடி மீது கடும்
அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கெடு விதித்தார்.
இதையடுத்து செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி
நீக்கினார்.
இதை எதிர்பார்த்து காத்திருந்தது போலவே செங்கோட்டையன், கடந்த வாரம்
டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை
சந்தித்து பேசினார். அதன் பிறகும் ஒருங்கிணைப்பு குறித்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இபிஎஸ் ஒரு தெளிவான முடிவுடன் டெல்லிக்குச் செல்வதாக
சொல்லப்படுகிறது. யாரையும் ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை என்பதையும், கட்சியில் இருந்து
வெளியேற்றப்பட்டவர்களுடன் உறவு வைக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
அமித்ஷாவை தைரியமாக மிரட்டுவாரா எடப்பாடி என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.