Share via:
கடந்த முறை தி.மு.க.வில் சீட் வாங்கி ஜெயித்த பாரிவேந்தர் இப்போது பா.ஜ.க. பக்கம் நிற்கிறார். அதனாலோ என்னவோ அவர் சார்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு அ.தி.மு.க.வினரிடம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று தி.மு.க. கூட்டணிகளுக்கு 38.33 சதவிகிதமும் பா.ஜ.க.வுக்கு 18.48 சதவிகிதம் என்றும் அ.தி.மு.க.வுக்கு 17.26 சதவிகிதம் என்றும் நா.த.க.வுக்கு 7.26 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க. தவிர மற்ற கட்சியினருக்கு இதுவரை எந்த கூட்டணியும் உறுதி செய்யப்படவே இல்லை, அப்படியிருக்கும்போது இது எப்படி சரியாக இருக்கும் என்று நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தலா 4 முதல் 6 தொகுதிகள் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. குறைவான வாக்குசதவிகிதம் வைத்துக்கொண்டு எப்படி சீட் பிடிக்க முடியும் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி அ.தி.மு.க.வை விட பா.ஜ.க.வுக்கு வாக்கு விகிதம் அதிகம் என்று காட்டுவதால், ‘புறக்கணிப்போம் புதியதலைமுறை’ என்று அ.தி.மு.க.வினர் இறங்கி அடித்துவருகிறார்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க.வின் ராஜ் சத்யன், ‘பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய மாற்றமாக திரு. பச்சமுத்து அவர்களால் தொடங்கப்பட்ட “புதிய தலைமுறை” நாளிதழ், நாளடைவில் செய்தி தொலைக்காட்சியாகவும் விரிவாக்கம் அடைந்தபோது, மக்களின் குரலாக, நடுநிலையான செய்திகளை, “உண்மை உடனுக்குடன்” என்ற அடிப்படையில் வழங்குவர் என்ற பெரும் நம்பிக்கை இருந்தது.
ஆனால், இன்றைக்கு அவர்கள் அரங்கேற்றியுள்ள போலி கருத்துருவாக்கம், இவர்களும் மோசமான அரசியல் ஊதுகுழல் தான் என்பதை நிரூபித்துள்ளது. 3 சதவீத வாக்குகள் உள்ள பாஜக தங்கள் கூட்டணி கட்சி என்பதால் அதனைக் தூக்கிப் பிடிப்பதற்காக, அ.தி.மு.க.வின் வாக்குவங்கியை குறைத்துக் காட்ட முனைவது, குறைந்தபட்ச நேர்மையோ, அடிப்படை ஊடக அறமோ அறவும் அற்ற செயல்.
இந்த போலி கருத்துருவாக்கம், வெறும் கூட்டணி தர்மத்திற்காக நிகழ்த்தப்பட்டதா அல்லது அரை நிர்வாண வீடியோ வெளியிடப்படுமென்று யாரேனும் மிரட்டியதால் நிகழ்த்தப்பட்ட ஒன்றா? கல்வி நிறுவனம் வைத்து பல்வேறு பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் ஒருவர் நிர்வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்த்தும் இச்செயல், அவருக்கும் அழகல்ல! அவர் கல்லூரிக்கும் அழகல்ல!’ என்று தெரிவித்துள்ளார்.
இப்படி போலியாக உருவாக்கப்படும் கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து இங்கேயும் இவிஎம் மோசடி இடம்பெறுவதற்கு பா.ஜ.க. முயல்வதாகவும் கூறப்படுகிறது.