Share via:
வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்
பாசறை சார்பில் நடைபெறும் லட்சிய மாநாட்டிற்கு வந்த இ.பி.எஸ்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
ஏகப்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில், ‘அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்,
இருமொழி கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது’ என்றும் இ.பி.எஸ் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன்
வரும் 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார்.
வேலூர் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’2026ம் ஆண்டு நடைபெற
உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான வலிமையான வெற்றிக் கூட்டணி அமையும்.
கூட்டணிக்காக நாங்கள் யாரையும் நாடி செல்வது கிடையாது. ஆனால், எல்லோரும் எங்களைத் தேடி
வருவார்கள். 234 தொகுதிகளையும் வென்று காட்டுவோம்’’ என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.
மேலும், வரும் தேர்தலில் இந்த ஆட்சிக்கு
எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க
வேண்டும் என்பதை நானறிவேன் . அதை
மனதில் வைத்தே கூட்டணி அமைக்கப்படும்
என்றும் இபிஎஸ் கூறியிருக்கிறார் என்பதால்
மெகா கூட்டணி உறுதி என்றே அ.தி.மு.க.வினர் உற்சாகமாகியுள்ளனர்.
மத்திய அமைச்சரின்
இந்தி பேச்சு குறித்து, ‘’தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கும்
மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்
தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும் எனக்கூறுவது சரியல்ல. மும்மொழிக் கொள்கையை
ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தான் கடைபிடிக்கும்.
அதில் எந்த மாற்றமும் கிடையாது” எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக ஆட்சியில் இருந்த வரையிலும் இந்தி திணிக்கப்படவில்லை, இப்போது
அதற்கான முயற்சி நடக்கிறது என்றால் தி.மு.க.வினர் செய்த குழப்பமே காரணம் என்றும் குற்றம்
சாட்டினார். மேலும் பாலியல் குற்றம் நடக்கும்போது பிள்ளைகள், அப்பா, அப்பா என்று அழைக்கும்
சத்தம் கேட்கவில்லையா? என்றும் கேட்டு அதிரடி கொடுத்துள்ளார்.