Share via:
கொங்கு வட்டாரத்தில் இபிஎஸ்க்கு இருக்கும் எக்கச்சக்க ஆதரவை குறைக்கும்
வியூகத்தை எடுத்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதிமுகவுக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் திமுகவுக்கு
இழுப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏமாற்றி இழுத்துவருகிறார்.
இந்த நிலையில் கரூர் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி
இதுவரை இல்லாத அளவுக்கு செந்தில்பாலாஜியை வைத்து செய்துவிட்டார். செந்தில்பாலாஜி பற்றி
எல்லாமே இபிஎஸ்க்குத் தெரியும் என்பதால் புட்டுப்பட்டு வைத்திருக்கிறார்.
அவர், ‘’செந்தில் பாலாஜி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏமாற்று வேலையும்
கற்றுத் தேர்ந்தவர். மக்களை ஏமாற்ற ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது வித்தைகளைக் கண்டுபிடிப்பது
இவரது வாடிக்கை. 10 ரூபாய் என்றால் செந்தில் பாலாஜி. ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய்
டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியவர் செந்தில் பாலாஜி.
ஒருவரை ஏமாற்றி வெற்றி பெறவைத்து, முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று
ஆசை காட்டி, தனிக்கட்சி தொடங்கப்பட்டு, அதிமுகவில் இருந்து 18 பேரை கடத்திக்கொண்டு
போய் நட்டாற்றில் விட்டவர் தான் செந்தில் பாலாஜி. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒருவரை
திமுகவில் சேர்க்குறார், இதுதான் கூட்டணி லட்சணம்.
ஸ்டாலின் பொய் பேசுவார், ஆனால் பொய்யையே முதலீடாகக் கொண்டவர் செந்தில்
பாலாஜி. இன்றைக்கு 10 ரூபாய் என்றால் அனைவருக்குமே தெரியும், தமிழ்நாடு முழுவதும்
6 ஆயிரம் மதுக்கடைகள். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது,
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு
450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி
ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
போக்குவரத்துத் துறையில் அம்மா இருக்கும்போதே தவறு செய்ததால்தான்
பதவியிலிருந்து நீக்கப்பட்டார், மின்சாரத்துறையில் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல், ட்ரான்ஸ்பாரம்
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சிறைக்கு சென்ற பிறகும் ஊழல் செய்திருக்கிறார்.
அந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது, விடவே மாட்டார்கள்.
சக்கரம் சுழல்கிறது, அடுத்தாண்டு அதிமுக ஆட்சி மலரும். யார் யார்
தவறு செய்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள். அமலாக்கத்துறையே இதில்
ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளியிட்டது, முழுமையாக விசாரித்தால்
40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வருகிறது. இதுவும் அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்படும்.
பொய் சொல்வதில் செந்தில்பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால்
பொருந்தும், 2021 தேர்தலில் ஆற்றில் மணல் அள்ளுவது சம்பந்தமாகப் பேசினார். ஸ்டாலின்
11 மணிக்கு பதவியேற்றதும், 11.05க்கு மாட்டிவண்டியில் மணல் அள்ளப்படும் என்றார். மாட்டுவண்டி
மக்களுக்கு நாமம் போட்டதுதான் மிச்சம். டெக்னிக்கலாகப் பேசி ஏழைகளை ஏமாற்றுவதில் வல்லவர்
செந்தில்பாலாஜி.
ஆற்று மணல் அள்ளும் கடத்தல்காரர்கள் பற்றி புகார் கூறிய மணிவண்ணன்
என்பவரை வெட்டி சாய்த்துவிட்டனர். ஆனால் வேறுவிதமாக வழக்கை மாற்றிவிட்டனர். பொய் வழக்கு
போட்டுள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை இன்று ஏவல்துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜியால்
அவரையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை, உங்களையா காப்பாற்றப் போகிறார்? அவரே 450 நாட்களுக்கு
மேல் சிறையில் இருந்தார், இன்னும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரது துறையில் பல
ஊழல்கள் நடந்திருக்கிறது, மத்திய அரசு தோண்டியெடுக்கிறது, அதிமுக அரசு வந்த பிறகு,
முழு விசாரணை நடத்தப்பட்டு, செந்தில்பாலாஜி பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்.
எனவே அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். திருட்டுத்தனமாக மணல்
அள்ளப்படுகிறது, அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை எச்சரிக்கிறோம். மாவட்ட ஆட்சித்
தலைவராக இருந்தாலும் சரி, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அவர்கள்
மீதும் முறையாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுக்கொடுப்போம்…’ என்று பேசியிருக்கிறார்.
இதற்கு செந்தில்பாலாஜி என்ன சொல்வார் என்பதைப் பார்க்கலாம்.