Share via:
அண்ணா தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்கு எந்த தியாகத்துக்கும்
தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை அடுத்து, ‘தங்களுக்கான வாசல் திறந்துவிட்டது’
என்று பன்னீர் டீம் குதூகலம் அடைந்தனர். ஆனால், பன்னீர், தினகரன் ஒருபோதும் சேர்க்கப்பட
மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெளிவு படுத்திவிட்டார். இதையடுத்து
பா.ஜ.க. டீம் பதட்டத்துக்குப் போயிருக்கிறது.
சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து ஒரு டீம் எடப்பாடி பழனிசாமியை
சந்தித்தது. அவர்களுடைய திட்டப்படி சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லாத பொதுச் செயலாளர்
பதவியும் பன்னீருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியும் கொடுத்தால் போதும். சட்டமன்றத்
தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 40 சீட் வேண்டும். தினகரனின் கட்சியுடன் தேவை என்றால் கூட்டணி
வைத்துக்கொள்ளலாம், இல்லையெனில் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை
நடத்தியிருக்கிறார்கள்.
இதற்கு உடனடியாக பதில் சொல்லாத எடப்பாடி பழனிசாமி அண்ணா தி.மு.க.
73வது ஆண்டு விழாவில் ஒரேயடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்தே சசிகலா கொதித்து
எழுந்து, ஒரு மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறேன் என்று பேசினார். இன்று ஓ.பன்னீர்செல்வம்,
‘’எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி
அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம்
அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை
ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம்…’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு அ.தி.மு.க.வினர், ‘’தலைமைக் கழகத்தை குண்டர்களை கொண்டு
அடித்து, நொறுக்கியதோடு மட்டுமல்லாது, அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளீர்கள்.
அதற்கு முதலில் எப்போது தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள்? குடும்ப அரசியலை எதிர்க்கும்
அதிமுகவில், புரட்சித் தலைவியின் மறைவுக்குப் பின் உங்கள் மகனை முன்னிலைப் படுத்தி
அரசியல் செய்தீர்கள். அதற்கு எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்? பாஜகவுக்கு அடிமையாக இருக்கும்
நீங்கள், பாஜகவை தூக்கி எறிந்துவிட்டு, சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு எப்போது வருவீர்கள்?
இதில் ஒன்றை கூட உங்களால் செய்ய முடியாது எனில், அப்படிப்பட்ட நீங்கள் அதிமுகவுக்கு
தேவையில்லை’’ என்று வறுத்தெடுக்கிறார்கள்.