Share via:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அதற்கேற்றவாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முதல் காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையில் கள்ளச்சாராய விற்பனை திமுக அரசுக்கு தெரிந்தே நடந்துள்ளது என்று கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி வீட்டின் கதவில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தின் ஸ்டிக்கரை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டினர்.
போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக தொடர்ந்து திமுக அரசு மீது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது உள்ளிட்டவை தொடர்ச்சியாக அரங்கேறின.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்புகளின் போது தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.